Sunday 10 March 2013

மயக்கம் என்ன..!






வாகன இரைச்சல்
வானத்தின் இறைச்சல்
இருந்தும் நீ தூக்கத்தில் உளறும்
என் பெயரின் சத்தம்
என் செவி மடல்களில்
தெள்ளத் தெளிவாய்க் கேட்கிறதே..!

எங்கோ போகும் ரயில் சத்தம்
உன் நித்திரை கலைத்திருக்கக்கூடும்
ஒரு கணம் இமை குறுக்கி நிமிர்த்தினாய்
ரயிலைத் திட்டத்தான் தோன்றியது
பாவம் அது என்ன செய்யும்
பிழைத்துப் போகச்சொல்லி
மன்னித்து விட்டுவிட்டேன்..!

என்ன இது திடீரென்று
உன் மூச்சுக்காற்றில்
குளுமை கலந்து வருகிறதே ஏன்?
ஒருவேளை உன் கனவிலிருந்து
என் நினைவுகள்
கலைந்துவிட்டனவோ..!
உன் மூச்சுக்காற்றில் குளிர் காய்ந்த
தென்றல்கூட
காத தூரம் சென்றோடிவிட்டது.

கலாபனே ஏனடா
என்னைக் காதலித்தாய்
இன்று நீ உறங்குகிறாய்
உழைப்பின் களைப்பால்
நானோ கிறங்குகிறேன்
உன்தன் நினைப்பால்..!

நீ தழுவி எனக்கிட்ட முத்தச்சுவடு
காயுமுன் உறக்கம்
உன்னைத் தழுவிவிட்டதோ
எனக்கு மட்டும்தான் தெரியும்
நான் உன் பிள்ளையைச் சுமக்கிறேன்
நீ உறக்கத்தில் என்னையும் சேர்த்து
சுமக்கிறாயென்று..!

- சுடர்க்கொடி


எனக்குள்ளே எனக்குள்ளே..!























கவிதையாய் கண் சிமிட்டும்
கலியுக கண்ணனே
உன் காற்று வீசும் திசைகளில்
கவிதையும் வீசுமோ

உன் வாசம் கண்டதும்
வரைமுறையில்லாமல்
வார்த்தைகளும்
வந்து விழுகிறதே
பிறை நிலா என்னோடு பேசுகிறது
மேகக் கூட்டம் ஒன்றுதிரண்டு
வாழ்த்து சொல்கிறது
வெட்கப் புன்னகை
எனக்குள்ளே எனக்குள்ளே..!

நாளும் நான் பார்த்து எழும்
நவயுக ராஜனே
நீ விழி திறக்கும் நேரம்
நான் விழித்திருக்கும் நேரம்
கண்கள் திறந்ததும்
கைகள் கட்டியணைக்கத் துடிக்கும்
மனமோ தத்தளித்து மிதக்கும்
அர்த்தப் புன்னகை
எனக்குள்ளே எனக்குள்ளே..!

நீ இல்லாத நேரம்
வானம் வெரிச்சோடிக் கிடக்கும்
காற்றில் ஈரப்பதம் கூடும்
உள்ளம் உன் பெயரை
உச்சரித்து உச்சரித்தே தேயும்
பறந்து திரியும் பட்சிகளும்
எனைப் பார்த்து ஏளனம் செய்யும்
உன் வருகை அறிந்ததுமே
இவையனைத்தும் தன்னிலை மாறும்
கர்வ புன்னகை
எனக்குள்ளே எனக்குள்ளே..!

என் முகம் சிவக்கும் ரோஜாவாய்
மனம் உவக்கும் உனக்காய்
சினம் கொஞ்சம் இருக்கும்
உன் மணம் கண்டதும் இறக்கும்
மீண்டும் புத்தம் பதிதாய்ப் பிறப்பேன்
புது சொர்க்கம் உருவாகும்
சூரியன் இறப்பான்
வெளிச்சம் எனை சூழும்
ஒளிரும் புன்னகை
எனக்குள்ளே எனக்குள்ளே..!

- சுடர்க்கொடி 

சுகமான விடியல்..!





ஒவ்வொரு நாளும் சுகமாய் விடிகிறது
உன் முகம் பார்ப்பது அதிலும் இனிது!

நினைவுகள் வருதே உன் 
முதல் நாள் அலுவலகம்
திருமணத்திற்கு பின்பு
வேகமாய் நகர்ந்த மணித்துளிகளை
நீ செல்லமாய் கடிந்ததும்
விடை பெற்றுச் சென்ற பின்பும்
பின்னோக்கியே உன் நினைவுகளும்
கூடவே எடுத்துச் சென்ற என் நினைவுகளும்!

சுகமாய் இருந்தது
ஏக்கத்துடன் காத்திருந்த அந்த நிமிடங்கள்
நினைத்துக்கொண்டேன்
நானும் ஒரு கன்னிகையோ
இல்லை இல்லை அவள் பாடோ பணத்திற்காக
என் வாழ்வோ உன் மனத்திற்காக!

ஆதவனும் மறைவான் அக்கறையாய்
என் மனமும் கரையும் உனக்காக
காத்திருந்தேன் நான்
பூரித்த மனதுடன்
என் விழியோ வழியினிலே
நீயும் வருவாய் களைத்து தெளிந்த மனதுடன்
உருவாகுமே புது சொர்க்கம் நம்மிடையே
மீண்டெழுகிறேன் என் நினைவுகளை

உன் வரவுக்காக ஏங்கும் ஒவ்வொரு நளும்
சுகமாய்த்தான் விடிகிறது..!

- சுடர்கொடி