Sunday 10 March 2013

மயக்கம் என்ன..!






வாகன இரைச்சல்
வானத்தின் இறைச்சல்
இருந்தும் நீ தூக்கத்தில் உளறும்
என் பெயரின் சத்தம்
என் செவி மடல்களில்
தெள்ளத் தெளிவாய்க் கேட்கிறதே..!

எங்கோ போகும் ரயில் சத்தம்
உன் நித்திரை கலைத்திருக்கக்கூடும்
ஒரு கணம் இமை குறுக்கி நிமிர்த்தினாய்
ரயிலைத் திட்டத்தான் தோன்றியது
பாவம் அது என்ன செய்யும்
பிழைத்துப் போகச்சொல்லி
மன்னித்து விட்டுவிட்டேன்..!

என்ன இது திடீரென்று
உன் மூச்சுக்காற்றில்
குளுமை கலந்து வருகிறதே ஏன்?
ஒருவேளை உன் கனவிலிருந்து
என் நினைவுகள்
கலைந்துவிட்டனவோ..!
உன் மூச்சுக்காற்றில் குளிர் காய்ந்த
தென்றல்கூட
காத தூரம் சென்றோடிவிட்டது.

கலாபனே ஏனடா
என்னைக் காதலித்தாய்
இன்று நீ உறங்குகிறாய்
உழைப்பின் களைப்பால்
நானோ கிறங்குகிறேன்
உன்தன் நினைப்பால்..!

நீ தழுவி எனக்கிட்ட முத்தச்சுவடு
காயுமுன் உறக்கம்
உன்னைத் தழுவிவிட்டதோ
எனக்கு மட்டும்தான் தெரியும்
நான் உன் பிள்ளையைச் சுமக்கிறேன்
நீ உறக்கத்தில் என்னையும் சேர்த்து
சுமக்கிறாயென்று..!

- சுடர்க்கொடி


No comments:

Post a Comment